வில்லியம்சனுக்குப் பதிலாக இலங்கை டி20 கேப்டனைத் தேர்வு செய்த குஜராத் அணி

வில்லியம்சனுக்குப் பதிலாக இலங்கை டி20 கேப்டனைத் தேர்வு செய்த குஜராத் அணி


காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து விலகிய கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக இலங்கை டி20 கேப்டன் தசுன் ஷனகா தேர்வாகியுள்ளார்.

ஐபிஎல் 2023 போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்றபோது கேன் வில்லியம்சனுக்குக் காயம் ஏற்பட்டது. சிக்ஸருக்குப் போகவிருந்த பந்தை எல்லைக்கோடு அருகே நின்றுகொண்டிருந்த கேன் வில்லியம்சன், கேட்ச் பிடிக்க முயன்றார். சிக்ஸருக்குச் செல்வதையும் தடுத்தார். கடைசியில் அது பவுண்டரியானது. இந்த அருமையான முயற்சியில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருடைய வலது கால் முட்டியில் பலமாக அடிபட்டது. பிறகு, இருவரின் உதவியுடன் தான் வில்லியம்சனால் மைதானத்தை விட்டு வெளியேற முடிந்தது. இயல்பாக நடக்கக் கூட முடியாத, வலியால் துடித்த வில்லியம்சனின் நிலைமையைப் பார்த்து குஜராத் ரசிகர்கள் பதறிப் போனார்கள் (கூடவே நியூசிலாந்து ரசிகர்களும்). இதனால் பேட்டிங் செய்ய வில்லியம்சன் வரவில்லை. சிஎஸ்கேவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இம்பாக்ட் வீரராக சாய் சுதர்சன் களமிறங்கினார். இதையடுத்து காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து வில்லியம்சன் விலகினார்.

இந்நிலையில் வில்லியம்சனுக்குப் பதிலாக இலங்கை அணியின் டி20 கேப்டன் தசுன் ஷனகாவை குஜராத் அணி தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக ஷனகா விளையாடவுள்ளார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 187.87 ஸ்டிரைக் ரேட்டுடன் 124 ரன்கள் எடுத்தார்.



Source link